Tuesday, May 17, 2016

அன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக்கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
ஆர்வமுடன் அதை கேட்ட மன்னன், அவனுக்கு நன்றி கூறி அதை வாங்கி குடித்தான். ஒரு வாய் குடித்தவன் சற்று நிறுத்த அந்த இளைஞன் ஆர்வமுடன் அவரது ரீயாக்ஷனை கவனித்துக்கொண்டிருந்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.
“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தியதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு, ராணி அரசனை கோபித்துக்கொள்கிறாள்.
“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நான் கேட்க கேட்க காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்தம் நீரையும் குடித்துவிட்டீர்களே…”
“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல, அந்த தோல் பையை எடுத்து பார்க்கிறாள். ஆம்… அதில் இன்னும் கொஞ்சம் நீர் இருக்கிறது.
ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.
“இந்த தண்ணீரையா நீங்கள் உலகிலேயே சிறந்த நீர் என்று மெச்சிக்கொண்டீர்கள்? என்ன ஆயிற்று உங்களுக்கு??”
“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது. அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப்பட்டிருக்கும். அன்பைவிட சுவையானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு தெரியும் என்பதால் தான் நானே முழு நீரையும் குடித்தேன்” என்று விளக்கமளிக்கிறான்.
ராணி வெட்கி தலை குனிகிறாள்.
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாமல் வாழ்ந்தால் அதுவே பெரிய புண்ணியம்தான். மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும். நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும். இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை. அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள். யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம.

நன்றி-சித்தார் கோட்டை.காம்

Monday, May 16, 2016

ரமழானின் நோக்கத்தை முஸ்லிம்கள் நிறைவேற்றுவார்களா?

இம்தியாஸ் யூசுப் ஸலபி-
விசுவாசிகளே! நீங்கள் இறையச்சம் (தக்வா) உடையவர்களாக திகழ்வதற் காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டவாரே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட் டுள்ளது. (அல்குர்ஆன் 2:183)
முஸ்லிம் மக்களை பக்குவப்படுத்தி நல்லொழுக்கமுள்ளவர்களாக அல்லாஹ் வை பயந்து நடக்கக் கூடியவர்களாக மாற்றுவதே நோன்பின் பிரதான நோக்கமாகும். தவிர காலையிலிருந்து மாலைவரை பசித்திருந்து தாகித்திருந்து வீணாக நேரத்தைப் போக்குவது நோன்பின் நோக்கமல்ல.
சஹர் செய்ததிலிருந்து நோன்பு திறக்கும் வரை சாப்பிடக்கூடாது, பருகக்கூடாது, மனைவியிடம் உறவு கொள்ளக்கூடாது போன்ற ஆகுமாக்கப் பட்ட சில காரியங்கள் தடுக்கப்படுகின்றன. தனக்கு உரிமையான இக்காரியங்களை அல்லாஹ்வுக்காக விட்டு விட்டு தியாகம் செய்ய முன்வருபவன் அடுத்தவனுடைய சொத்துக்களை அபகரிக்க மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், மானக் கேடான, பாவமான காரியங்களில், ஈடுபட மாட்டான். மோசடி செய்ய துணிய மாட்டான். இத்தகைய பயிற்சியை வழங்கு வது தான் நோன்பின் அடிப்படை நோக்கம். இந்தப் பயிற்சியை பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இவனுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் கிடையாது.
நோன்பு வைத்திருக்கும் போது பொய் பேசுவதையும் அதன் அடிப்படையில் செயல்படுவதையும் எவர் விட்டுவிட வில்லையோ அவர் தாகித்திருப்பதனாலும், பசித்திருப்பதனாலும் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி)
ஆன்மீக ரீதியில் மக்களை பண்படுத்தி பக்குவப்படுத்தி உண்மையாளர்களாக, வாய்மையுள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் பெரும் இலட்சியப் பயணத்தின் பயிற்சிப் பாசரையாக இருப்பது தான் ஒரு மாத கால நோன்பு! ஒவ்வொரு வணக்க வழி பாடுகளும் (இபாதத்களும்) இந்தப் பயிற்சி யைத் தான் எங்களுக்கு வழங்குகிறது.
நோன்பு உங்களை தீமைகளிலிருந்து தடுக்கும் ஒரு கேடயமாகும். என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உங்களில் எவரும் நோன்பு பிடித்திருக்கும் போது கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். வீண் கூச்சல் போட வேண்டாம் எவரேனும் ஏசி னால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளியாக இருக்கிறேன். (என்னுடன் பிரச்சினைப்படாதே) என்று கூறட்டும். அல்லாஹ்வின் மீது சத்திய மாக, நோன் பாளியின் வாயிலிருந்து வெளிப்படும் மணம் அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி.
வாயை திறந்தால் தூசனம் பேசுபவர் களுக்கு, கெட்டவார்த்தைகளை பயன் படுத்துபவர்களுக்கு, வீண் கூச்சல் போடு பவர்களுக்கு, தொலைக்காட்சி (வுஏ), சினிமாவில் மோகம் கொண்டவர்களுக்கு அதனை விட்டும் தூரமாகி தங்களுடைய நடத்தைகளை சீர் செய்து, நல்ல பண்பாடு களை வளர்த்துக் கொள்வதற்கு நோன்பு ஒர் அரிய சந்தர்ப்பம்.
வீண் பேச்சுக்களில் சண்டை சச்சரவு களில் ஈடுபடாமல் நோன்பாளிகளுக்கு தொல்லை கொடுக்காமல் இரவு நேரங் களில் அரட்டையடிக்காமல், பாதைகளில் விளையாட்டுகளில் ஈடுபடாமல் அடுத்தவர் களுக்குக் கஷ்டத்தை கொடுக்காமல் வாழப் பழகிக்கொள்ள பயிற்சிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றி மாற்று மத நண்பர்களிடத்தில் தப்பான எண்ணங்கள் உருவாகாத முறையில் நடந்து கொள்ளும் அதேவேளை நோன்பின் மாண்புகளை புரிவைக்கும் செயல்பாடுகளை காண்பிக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுவும் ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆத்மீக லௌகீக வாழ்வின் அர்த்தங்களை புரிய வைத்து செயல்படுத்தவைப்பதைத் தான் இந்த ரமழான் எங்களிடம் எதிர்ப்பார்க்கிறது. இந்த நோக்கத்தை புரியாமல் இந்தப் பயிற்சிகளை பெறாமல் ஒருவர் நோன்பு நோற்பதால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.
நன்றி-இஸ்லாம்கல்வி.காம்