ஒரு பிரதேசத்தின் கல்வி மட்டத்தை எடுத்துக் காட்டும் பிரதான அளவுகோளாக அப்பிரதேசத்தின் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை கருதப்படுகின்றது. ஒரு ஊரில் அரச உத்தியோகத்தர்கள் அதிகமாக இருக்கின்ற போது அது படித்தவர்கள் உள்ள ஊர் என்றும், குறைவாக உள்ள போது கிராமச்சாயல் கலந்த பின்தங்கிய ஊராகவும் கருதப்படுகின்றது.
கிண்ணியாவின் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தற்போது 2440 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகம் வெளியிட்டுள்ள 'அரச உத்தியோகத்தர்கள் - 2012' என்ற நூலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கல்வித்துறை சார்ந்தோர் 1007 பேர் கிண்ணியாவில் வசிக்கின்றனர். இதில் கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்போர் உள்ளடக்கப் பட்டுள்ளனர்.
கல்வித்துறை மற்றும் பாதுகாப்பு படைகள் தவிர்ந்த ஏனைய அரச துறை சார்ந்தோர் 1128 பேர் கிண்ணியாவில் வசிக்கின்றனர். இதில் உயர் பதவி வகிப்போர் முதல் அலுவலகப் பணியாளர் வரையானோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கிண்ணியாவைச் சேர்ந்த 305 பேர் பாதுகாப்புப் படைகளில் பணி புரிகின்றனர். இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கல்வித் துறைசார்ந்தோர் குட்டிக்கராச்சி கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே அதிகம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள கல்வித் துறைசார்ந்தோரின் எண்ணிக்கை 91 ஆகும். இரண்டாவது எண்ணிக்கையான 83 பேர் முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர். மூன்றாவது எண்ணிக்கையான 82 பேர் மாலிந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், 4வது எண்ணிக்கையான 78 பேர் சின்னக்கிண்ணியா பிரிவிலும் 5வது எண்ணிக்கையான 77 பேர் மாஞ்சோலைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வசிக்கின்றனர்.
உப்பாறு, நடுஊற்று ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கல்வித்துறைசார்ந்த அரச உத்தியோகத்தர் எவருமில்லை.. சூரங்கல், மஜீத்நகர், மணியசங்குளம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தலா 1 ஆசிரியர்கள் வசிக்கின்றனர்.
கல்வித்துறை, படைகள் தவிர்ந்த எனைய அரச உத்தியோகத்தர்களைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையான 102 பேர் மாஞ்சோலைச் சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர். இரண்டாவது அதிக எண்ணிக்கையான 94 பேர் பெரிய கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் அதேவேளை, 3 வது அதிக எண்ணிக்கையான 93 பேர் முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், 4 வது அதிக எண்ணிக்கையான 84 பேர் மாலிந்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், 5வது அதிக எண்ணிக்கையான 76 பேர் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வசிக்கின்றனர்.
உப்பாறு, மஜீத்நகர், மணியரசங்குளம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் எவருமில்லை. சூரங்கல், நடுஊற்று ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தலா 4 ஏனைய அரச உத்தியோகத்தர்கள் வசிக்கின்றனர்.
இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை ஆகிய படைத்தரப்பைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையான 55 பேர் ஆயிலியடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர். இவர்களுள் அதிகமானோர் சிவில் பாதுகாப்புப் படையில் உள்ளனர். இரண்டாவது அதிக எண்ணிக்கையான 26 பேர் இடிமண் கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், மூன்றாவது அதிக எண்ணிக்கையான 24 பேர் முனைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வசிக்கின்றனர். 4வது அதிக எண்ணிக்கையான 20 பேர் காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் அதேவேளை 5வது அதிக எண்ணிக்கையான 18 பேர் மாஞ்சோலைச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கின்றனர்.
உப்பாறு, ஈச்சந்தீவு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எவரும் படைகளில் கடமை புரியவில்லை. ஆலங்கேணி, மஹ்ரூப்நகர், கட்டையாறு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தலா இருவர் படைத்தரப்பில் பணி புரிகின்றனர்.
படைத்தரப்பைப் பொறுத்தவரை மொத்தமாக 166 பேர் சிவில் பாதுகாப்புப் படையில் பணி புரிகின்றனர். 103 பேர் பொலிஸில் கடமை புரிகின்றனர். இலங்கை இhணுவத்தில் 29 பேரும், கடற்படையில் 5 பேரும், விமானப் படையில் இருவரும் பணி புரிகின்றனர்.
இலங்கையில் உயர் பதவிகளாகக் கருதப்படும் அகில இலங்கைச் சேவைகளிலும் கிண்ணியாவைச் சேர்ந்தோர் இருக்கின்றனர். அந்த வகையில் இலங்கைத் திட்டமிடல் சேவையில் மூவரும், இலங்கை கல்வி நிருவாக சேவையில் மூவரும், இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இருவரும் பணிபுரிகின்றனர். இலங்கை நிருவாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை விவசாயச்சேவை, இலங்கை பொறியியல் சேவை ஆகியவற்றில் தலா ஒருவரும் பணி புரிகின்றனர்.
கிண்ணியாவில் கல்வி மட்டம் அதிகரித்து வருவதால் அரச உத்தியோகத்தரகளின் எண்ணிக்கையும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது.
********************
No comments:
Post a Comment