Wednesday, October 2, 2013

முஸ்லிம் சவால்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவர் பெளத்தர்கள்! பொதுபல சேனா எச்சரிக்கை

BB“முஸ்லிம் அடிப்படை வாதிகளின் அபாயகரமான சவால்களுக்கு முகங் கொடுக்கும் அஹிம்சை வாதிகளான பெளத்தர்கள், தமது பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். உணர்வுள்ள பெளத்தர்கள் தமது பிரச்சினைகளுக்கு மோதலினூடாகத் தீர்வு காண்பர்.”
இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானாசார தேரர். கிழக்கிலுள்ள 10 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள், சவூதி அரேபியாவிலிருந்து உதவிகளைப் பெற்று பெளத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அது மட்டுமல்லாது, தமது சமய நியதிகளையும் இலங்கை அரசமைப்பின் ஒரு பகுதியாக்கிக் கொள்ளவும் எவ்வித அச்சமும் இன்றிச் செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு – 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள நூலகச் சேவை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,  உலகிலுள்ள பெளத்தர்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்கின்றனர். அதுபோலவே இலங்கையிலுள்ள பெளத்தர் களும் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். உலகில், சமாதானம், நல்லிணக்கம் எனப் பேசிக்கொண்டிருப்பவர்கள் எமது சமயத்துக்கு எதிராக செயற்படுகின்றனர்.  அன்று கத்தி, துப்பாக்கிகளூடாக பெளத்தர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், இன்று வேறு வடிவத்தில் கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
பெளத்தர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள இந்த அரசின் ஆட்சியில்தான் பெளத்த மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புகள் எமது கலாசாரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
 
அபாயகரமான முஸ்லிம் அடிப்படைவாதம்
பெளத்தர்கள் எதிர்நோக்கும் மிக அபாயகரமான சவால் முஸ்லிம் அடிப்படைவாதமாகும். 10 முஸ்லிம் அமைப்புகள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டு, சவூதி அரேபியாவுடன் தொடர்புகொண்டு பெளத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.தென் தாய்லாந்து, பங்களாதேஷ் முதலான நாடுகளில் பெளத்தர்கள் தாக்கப்படுகின்றனர். பங்களாதேஷிலுள்ள பெளத்தர்கள் வாளை எடுத்துக் கொண்டுதான் கடைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலைதான் தற்போது கிழக்கில் உருவாகியுள்ளது.
கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய பகுதிகள் முழுமையாக முஸ்லிம் அடிப்படைவாதமாக மாறியுள்ளன. அங்குள்ளவர்கள் தமக்கென ஒரு தனியான நீதிமன்றம், தனிச்சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகின்றனர். ஒரு நாட்டில் எப்படி இவ்வாறு செய்ய முடியும்? அரசிலுள்ள பல அமைச்சர்கள் பெளத்த சக்திகளுக்கு எதிராகப் பேசுகின்றனர். ஆனால் பெளத்த சமயத்தைப் பாதுகாக்கும் சட்ட மூலமொன்றை நிறைவேற்ற முடியாமல் தான் அவர்கள் இருக்கின்றார்கள்.
 
பெளத்தரும் ஆயுதம் ஏந்துவர்
முஸ்லிம் அடிப்படைவாதத்தால் அச்சுறுத்தப்படும் பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், பெளத்தர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை எதிர்காலத்தில் உருவாகும். ஏனெனில் எமது மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பெளத்தர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தீர்வு காணாவிட்டால், உணர்வுள்ள பெளத்த மக்கள் மோதலினூடாகவே அதற்குத் தீர்வு காண்பர். அந்த நிலை ஏற்படாது என நாம் நினைக்க முடியாது எனத் தெரிவித்தார் ஞானாசார தேரர்.-உதயன்{நன்றி-லங்கா முஸ்லிம்

No comments: